புதுதில்லி: மத்திய அரசின் பொது கொள்கைக் குழுவான நிதி ஆயோக், 2023-24 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சிக் குறியீடு பட்டியலை வெளியிட்டுள்ளது. வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு, தேசிய அளவிலான இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிட்ட வளர்ச்சிக் குறியீடுகளின்படி, நீடித்த நிலைத்த வளர்ச்சியை அடைவதில் உத்தரகாண்ட் மாநிலம் முதலிடம் பெற்றுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இப்பட்டியலில் கேரளா இரண்டாம் இடத்தையும், தமிழ்நாடு மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
மாறாக பிகார், ஜார்கண்ட் மற்றும் நாகலாந்து மாநிலங்கள் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளதாகவும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களை பொருத்தவரை சண்டீகர் முதலிடத்தும், லாடக் கடைசியில் இடத்திலும் உள்ளன.
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2023 -24 ஆம் ஆண்டுக்கான இந்த அறிக்கையில், தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறியீடு 71 ஆக அதிகரித்துள்ளது. இதுவே 2020-21 ஆண்டில் வளர்ச்சிக் குறியீடு 66 ஆக இருந்தது. இதுவே 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அடிப்படை அறிக்கைக்கு முன்பு, நாட்டின் வளர்ச்சிக் குறியீடு 57 ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களின் வளர்ச்சிக் குறியீடு அளவு 2018 இல் 42 முதல் 69 வரை இருந்த நிலையில், 2023-24 இல் இதுவே 57 முதல் 70 ஆக இருக்கிறது என்றும் நிதி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக 2020 -21 நிதியாண்டில் மாநிலங்களின் வறுமை ஒழிப்பு குறியீடு 60 ஆக இருந்த நிலையில், 2023 -24 இல் இக்குறியீடு 72 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலங்களின் வளர்ச்சிக் குறியீடு குறித்த நிதி ஆயோக் 2018 இல் வெளியிட்ட அறிக்கையை 2023- 24 ஆம் ஆண்டு அறிக்கையுடன் ஒப்பிடும்போது, உத்தரப் பிரதேசம் (25), ஜம்மு -காஷ்மீர் (21), உத்தரகாண்ட் (19). சிக்கிம் (18), ஹரியானா (17), அசாம் திரிபுரா, பஞ்சாப் (16), மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா (15) புள்ளிகள் அதிகரித்து, வேகமாக வளரும் மாநிலங்கள் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜுன் 25 இனி அரசியலமைப்பு படுகொலை தினம்; மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!