மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை அடுத்த கட்கோபர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீசிய கடுமையான புழுதிப் புயலால் ராட்சத விளம்பர பேனர் விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ நேரத்தில் அப்பகுதியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த ராட்சத விளம்பர பலகையின் அடியில் சிக்கிக் கொண்டனர்.
தொடர் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 16 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த விபத்தி்ல் விளம்பர நிறுவன உரிமையாளர் பவேஷ் பிஹிண்டே என்பவரை ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 16 பேரின் உயிரை பலி கொண்ட விளம்பர பலகை வைப்பதற்கு, பவேஷ் பிஹிண்டே மாநகராட்சியிடம் அனுமதி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. முன்னதாக இந்த கோர விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு பேரின் சடலங்கள் நேற்று (மே.16) கண்டெடுக்கப்பட்டன.
விளம்பர பலகை விழுந்ததில் சிக்கிக் கொண்ட காரில் இருந்து 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மருத்துமனையில் 40க்கு மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 30 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மீதமுள்ளவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவிஷீல்டு தடுப்பூசியால் மிக மோசமான பக்கவிளைவு ஏற்பட வாய்ப்பு! ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவல்! - Covishield Vaccine