கேரளா (திருவனந்தபுரம்): கேரளா காசர்கோடு பகுதியில் நடந்த விரர்காவு கோயில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து இரவு 12 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
கேரள மாநிலம், காசர்கோடு பகுதியில் உள்ள நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் விரர்காவு கோயில் திருவிழா கோலாகலமாக நடந்து வந்தது. இந்நிலையில், திருவிழாவில் வாணவேடிக்கை களியாட்டம் நிகழ்ச்சியின்போது, ஏராளமான பக்தர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்ட மக்கள் அங்குமிங்குமா ஓட்டம் பிடித்துள்ளனர். ஆனால், இந்த தீ விபத்தி சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 97 பேர் 40% மற்றும் 60% தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்துள்ளனர்.
#WATCH | Kerala: On over 150 people injured in a fireworks accident in Nileshwaram, Kasargod MP Rajmohan Unnithan says, " shocking news came from nileshwaram in kasargod district last night. about 154 people have been injured and admitted to different hospitals. this theyyam… https://t.co/pPob9PzoK0 pic.twitter.com/SnlHsTKwS8
— ANI (@ANI) October 29, 2024
தற்போது இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நீலேஸ்வரம் போலீசார், இந்த திருவிழாவில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கவில்லை எனவும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கோயில் நிர்வாகியை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 நாட்கள் நடக்கும் இந்த திருவிழா, விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை விவரம்:
- கன்ஹாங்காடு மருத்துவமனை- 16
- சஞ்சீவனி- 10
- பரியாரம் மருத்துவக்கல்லூரி- 5
- ஐஷால் மருத்துவமனை- 17
- அரிமலா கன்ஹாங்காடு- 3
- MIMS கண்ணூர்- 18
- MIMS கோழிக்கோடு- 2
- KAH செருவத்தூர்- 2
- மன்சூர் மருத்துவமனை - 2
- மங்களூரு AJ மருத்துவக் கல்லூரி- 18
- தீபா மருத்துவமனை- 1