ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக, அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளது.
கனமழை காரணமாக நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் ஆந்திராவில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் என்.டி.ஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் சாலை மற்றும் ரயில்வே தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் 99 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 54 ரயில்கள் திருப்பி விடப்பட்டன என்றும், நான்கு ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டன என்றும் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 26 தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே 12 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 14 குழுக்கள் அனுப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதிப்பு குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.
அதேபோல, மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக வெள்ளம் பாதித்த இடங்களை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மிதவைஒ படகுகள் மூலம் சென்று பார்வையிட்டார். மேலும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
முன்னதாக, கனமழை காரணமாக ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு எக்ஸ்பிரசில் இருந்த பயணிகள், மாநில அரசின் சிறப்பு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழக ரயில்கள் ரத்து: இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்டிரலில் இருந்து நேற்று ஜெய்ப்பூர் செல்ல இருந்த அதிவிரைவு சிறப்பு ரயிலும், டெல்லி செல்ல இருந்த கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலும், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டன.
தாம்பரத்திலிருந்து ஹைதராபாத் செல்லும் செல்ல இருந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டது. இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 6.35 மணிக்கு புறப்பட்டு ஹஸ்ரத் நிஜாமுதீன் டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (12269), காலை 10.10 மணிக்கு புறப்பட்டு அகமதாபாத் செல்லும் நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலும் (12656), மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு பிலாஸ்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (12852) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் இருந்து சென்ற லாரியில் 1,600 ஐபோன்கள் திருட்டு.. மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா?