புதுச்சேரி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சியின், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நேற்று (திங்கட்கிழமை) புதுச்சேரியில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ‘கை சின்னத்தில் ’ வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், “மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசானது புதுச்சேரிக்கு யூனியன் பிரதேசத்திற்கான அந்தஸ்தை வழங்கியது. புதுச்சேரி முழுமையாக மாநில அந்தஸ்து பெற்ற மாநிலமாக மாற வேண்டும். மாநில அந்தஸ்து பெற்றுத் தர காங்கிரஸ் உறுதியாக உள்ளது. ஆனால் பிரதமர் மோடியும், என்.ஆர்.காங்கிரசும் மாநில அந்தஸ்தை பெற்று தர மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டது.
காங்கிரஸ் ஆட்சியில் 'புதுச்சேரி தனி மாநிலமாகும்': பாஜகவின் தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்போம் என ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை. ஒட்டுமொத்தமாக புதுச்சேரி மக்களை புறக்கணிப்பது என்பது தெளிவாக தெரிகிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மாநில அந்தஸ்து பெற்று தருவோம். மேலும், புதுச்சேரியில் மூடப்பட்ட ரேஷன் கடைகள், பஞ்சாலைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை திறப்போம் என்று உறுதியளித்தார்.
தமிழக அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை மூலம் பாஜக அரசு எந்த விசாரணையும் செய்யாமல் கைது செய்தனர். பாஜக அரசு குறுக்கு வழியில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கின்றனர். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரை வைத்து காங்கிரஸ் அரசுக்கு தொல்லை தந்தனர். இதேபோல் தான், ஆளுநர் ரவியை வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி தருகின்றனர்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்து அழைக்கவில்லை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை முடக்கும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது. புதுச்சேரி மாநில முதலமைச்சரைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். மோடி அரசு, அவரை செயல்படவிடாமல், தலையாட்டி பொம்மை போல் கைக்குள் வைத்துள்ளனர். பிரதமர் மோடி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு சோனியா, கார்கே ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தேன்; ஆனால் வரவில்லை, ராமரை மதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ராமருக்கு எதிர்ப்பானவர்கள் என்று எங்கள் மீது பொய் குற்றச்சாட்டுகிறார்.
மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் ரூ.155 லட்சம் கோடி வெளிநாடுகளில் கடன் பெற்றுள்ளார். கடனை வாங்கிவிட்டு பொருளாதாரம் வளர்ந்ததாக பிரதமர் கூறுவது, மோசடி. இவர்களது ஆட்சியில் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக மோடி வாக்குறுதி தந்தார். 10 ஆண்டுகளாகி விட்ட நிலையில், 20 கோடி பேருக்கு வேலை தந்திருக்கவேண்டும்; வேலை தரவில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்' என்று குற்றம்சாட்டினார்.
மகளிர் உரிமைத்தொகையாக ரூ.1 லட்சம்: தொடர்ந்து பேசிய அவர், வேலைவாய்ப்பு இல்லாத சூழல் மாற வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் காலியாக உள்ள 30 லட்சம் வேலைவாய்ப்புகள் ஒரே வருடத்தில் நிரப்புவோம். குடும்பத் தலைவி பெண்களுக்கு ஆண்டுதோறும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1 லட்சம் தருவோம். அங்கன்வாடி பணியாளர்கள், மதிய உணவுத்திட்ட பணிபுரிவோர் வாங்கும் ஊதியத்தை இரட்டிப்பாக்குவோம்.
பிரதமர் மோடி, அமித்ஷா மிகப் பெரிய சலவை இயந்திரம் வைத்துள்ளனர். வருவான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத் துறை மூலம் மிரட்டி அடிபணிந்தால் சலவை இயந்திரத்தில் போட்டு தூய்மை செய்து விடுகின்றனர். குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டோர் பாஜகவில் சேர்ந்தால் தூய்மையானவர்கள் ஆகின்றனர். மோடியின் வாக்குறுதி பொய்யானது. காங்கிரஸின் வாக்குறுதியே மெய்யானது' எனக் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: தர்பூசணி முதல் மாட்டு வண்டி வரை.. நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் வேட்பாளர்கள்! - Lok Election Campaign 2024