டெல்லி: 3வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கர்நாடகா, உத்தர பிரதேசம், கோவா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 25.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 32.82 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மகாராஷ்டிராவில் மிகவும் குறைவாக 18.18 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அசாமில் 27.34 சதவீதம், பீகாரில் 24.41 சதவீதம், சத்தீஸ்கரில் 29.90 சதவீதம், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 24.35 சதவீதம், கர்நாடகாவில் 24.48 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 30.21 சதவீதம் மற்றும் உத்தர பிரதேசத்தில் 26.12 சதவீத வாக்குகள் காலை 11 மணி வரை பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி டாமன் மற்றும் டையுவில் 11 மணி நிலவரப்படி 24.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3வது கட்ட மக்களவை தேர்தலில் 120 பெண்கள் உள்பட ஆயிரத்து 300 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 17.24 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் உயர்நிலைப் பள்ளியில் பிரதமர் மோடி வாக்களித்தார். முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்த பிரதமர் மோடியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவேற்றார். 3வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் பாஜக பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது 93 தொகுதிகளில் பாஜக 72 இடங்களை கைப்பற்றி இருந்தது. முன்னதாக 94 மக்களவை தொகுதிகளுக்கு இன்று (மே.7) வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.
மே 25ஆம் தேதி 6வது கட்ட மக்களவை தேர்தலுடன் சேர்த்து அனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 3ம் கட்ட மக்களவைத் தேர்தல்: மேற்கு வங்கத்தில் வெடிக்கும் வன்முறை? வெடிகுண்டு வீச்சு..? நடந்தது என்ன? - Lok Sabha Election 2024