பெங்களூரு: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில், பெங்களூரில் அம்மாநில அமைச்சரவை கூடியது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு, 'ஒரே நாடு-ஒரே தேர்தல்' மற்றும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதி வரையறை ஆகிய மூன்றிற்கும் எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. முன்னதாக, நீட் மீதான சர்ச்சைக்கு மத்தியில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) ரத்து செய்து, மாநிலங்கள் தாங்களாகவே நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சமீபத்தில் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார்.
3 தீர்மானம்: கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்த 3 தீர்மானங்களும் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், தொடர்ந்து அந்த தீர்மானங்கள் மீதான விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேபோல், 'கிரேட்டர் பெங்களூரு ஆளுமை சட்டம்-2024க்கு' (GBA) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக முன்னாள் முதன்மைச் செயலாளர் பி.எஸ்.பட்டீல் தலைமையில் 4 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு கடந்த சில நாள்களுக்கு முன்னர், பெங்களூரு மாநகராட்சியில் மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும் என அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.
அதில் பெங்களூருவுக்கு உள்கட்டமைப்பு, வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதற்காக 'கிரேட்டர் பெங்களூரு ஆணையம்'(GBA) உருவாக்கப்பட வேண்டும். பெங்களூரு மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கையை 400ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறிப்பிடப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு வழியில் கர்நாடகா: முன்னதாக கடந்த மாதம் நீட் தேர்வை தேசிய அளவில் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதேபோல், தற்போது கர்நாடகாவிலும் நீட் தேர்விற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்! நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?