பெங்களூரு: நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட துவங்கி விட்டன. மத்தியில் ஆளும் பாஜக முதல் கட்டமாக 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் பிரதமர் மோடி முந்தைய தேர்தல் போட்டியிட்ட அதே வாரணாசி தொகுதியிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காந்திநகர் தொகுதியிலும் போட்டியிடுவதாக தகவல் வெளியானது. தற்போது பாஜக வெளியிட்டுள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய 72 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில், தற்போதைய மத்திய அமைச்சர்கள் சிலருக்கும், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஹரியானா மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய மனோகர் லால் கட்டார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கர்நாடாகாவில் மொத்தமுள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இதில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், எம்.பியுமான டி.வி.சதானந்த கவுடா உட்பட 9 சிட்டிங் எம்.பிக்கள் இந்த வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.
இந்த பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் இரண்டு பெண்களும், பாஜக அல்லாத ஜெயதேவா இருதய அமைப்பின் முன்னாள் இயக்குநர் டாக்டர் மஞ்சுநாத் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பெங்களூரு புறநகர் தொகுதியில் போட்டியிடும் மஞ்சுநாத் இன்று பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாவேரி தொகுதியில் மகனுக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா ஏமாற்றம் அடைந்துள்ளார். இத்தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை போட்டியிடுகிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சோமண்ணா தும்கூரூ தொகுதியில் போட்டியிடுகிறார். உடுப்பி - சிக்கமங்களூரு தொகுதியில் ஷோபா கரந்த்லாஜேவுக்கு ஏற்பட்ட எதிர்ப்பை தொடர்ந்து, அவருக்கு பெங்களூரு வடக்குத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மைசூரூ - குடகு தொகுதியில் பிரதாப் சிம்ஹாவுக்கு பதிலாக மைசூரு மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்த உடையார் போட்டியிடுகிறார்.
மத்திய பெங்களூரு தொகுதியில் பி.சி.மோகன் போட்டியிடுகிறார். முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா ஷிமோகா தொகுதியிலும், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியிலும், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோசி தார்வாட்டில் போட்டியிடுகிறார்.
மேலும் தட்சிண கன்னடா தொகுதி நளின் குமார் கட்டீலுக்கு பதிலாக பிரிஜேஷ் சௌதாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. சிக்கோடி தொகுதியில் ரமேஷ் கத்தி சக்தியை மீறி, அண்ணாசாகேப் ஜோல்க்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜக 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! நிதின் கட்காரி, அனுராக் தாகூர் உள்ளிட்டோர் மீண்டும் போட்டி!