டெல்லி : ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி அணி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் எந்தப் பதவிக்கான போட்டியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக தனஞ்சய் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1996ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த, 1996 - 97 ஆம் ஆண்டில் பட்டி லால் பாயிர்வா என்ற மாணவர் ஜேஎன்யுவின் முதல் பட்டியலின மாணவர் சங்க தலைவராகி வரலாறு படைத்தார்.
அதன் பின் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராகி இருப்பது குறிப்பிடத்தக்கது. தனஞ்செய் ஒட்டுமொத்தமாக 2 ஆயிரத்து 598 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் சி அஜ்மீரா ஆயிரத்து 676 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியை தழுவினார்.
பீகார் மாநிலம் கயா பகுதியை சேர்ந்தவர் தனஞ்செய் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மாணவர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற இடது சாரி கூட்டணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஐக்கிய இடதுசாரி அமைப்புக்கு எனது வாழ்த்துக்கள்.
அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் வன்முறை தந்திரங்கள் மற்றும் இடதுசாரி வேட்பாளர் சுவாதி சிங்கின் வேட்புமனுவை கடைசி நிமிடத்தில் ரத்து செய்ததும் கூட அவர்களது தோல்வி பயத்தை வெளிப்படுத்தியது. அவர்களின் வெட்கக்கேடான செயல்கள் இருந்த போதிலும், ஜவஹர்லால நேரு பல்கலைக்கழக சமூகம் அதன் வளமான பாரம்பரியத்தை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த வெற்றி வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சியைக் குறிக்கிறது. இந்திய மக்கள் ஒற்றுமையாக ஓரணி சேர்ந்து 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை நிராகரிப்பார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க : காவிரி நீர் வீண் விரயம்- ரூ.1 லட்சம் அபராதம் வசூல்! பெங்களூரு குடிநீர் வாரியம் அதிரடி! - Bengaluru Cauvery Water Fine