ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மற்றும் பந்திபோரா மாவட்டங்களில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக உளவுத் துறையினர் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்து வந்தனர். அதன் பேரில், நேற்று (நவ.5) மாலை பாதுகாப்புப் படையினர் அந்த இரண்டு மாவட்டங்களிலும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பந்திபோரா மாவட்டத்தில் உளவுத்துறை தந்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் கெட்சன் வனப் பகுதிக்குள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது அங்கு பதிங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கி தாக்குதலை தொடங்கினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்ட நேரமாக துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதில் ஒரு பயங்கரவாதி சுடப்பட்ட நிலையில் உயிரிழந்தார். மற்றொரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மேலும், அந்த கைது செய்யப்பட்ட பயங்கரவாதி யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என மூத்த பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கமலா ஹாரீஸ் வெற்றி பெற குலதெய்வம் கோயிலில் பூஜை செய்த கிராமத்தினர்!
இதையடுத்து குப்வாரா மாவட்டத்தில் இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், கூட்டு பாதுகாப்புக் குழுவிற்கும் கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் ஒரு பயங்கரவாதி சுடப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
முன்னதாக, நவம்பர் 2ஆம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் மற்றும் மத்திய காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இரண்டு உள்ளூர்வாசிகள் மற்றும் உஸ்மான் பாய் என்ற ஒரு பாகிஸ்தானியர் உட்பட மூன்று பேர் சுடப்பட்டு உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடுகளின் போது நான்கு பாதுகாப்புப் படையினர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்