டெல்லி: இந்திய கடற்படைக்கு ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரான்ஸ் நாட்டின் அரசு மற்றும் டஸ்சால்ட் ஏவியேஷன் விமான தயாரிப்பு நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 26 ரபேல் விமானங்களை இந்திய கடற்படைக்காக கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான பிரான்ஸ் அதிகாரிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த மே 30ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற இருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரான்ஸ் அதிகாரிகள் இந்தியா வர இருந்த நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் அலோசனைக் கூட்டத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் ஈடுபட உள்ளனர். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ராணுவத்திற்கு தேவையான தளவாடங்களை வாங்கும் கொள்முதல் இயக்குநரகம் இது குறித்து பேச்சுவார்த்தையி ஈடுபடுகிறது. இந்த கூட்டத்தில் ரபேல் விமானத்தின் விலை மற்றும் கொள்முதல் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும்பட்சத்தில், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகியவற்றுக்கு 26 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான இந்தியாவின் டெண்டருக்கு, பிரான்ஸ் நாடு கடந்த டிசம்பர் மாதம் தனது அனுமதியை வழங்கியது.
அதற்கான ஒப்புதல் கடிதத்தையும் பிரான்ஸ் அரசு சமர்பித்தது. இந்த ஒப்பந்தம் இரு நாட்டு அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்பதால், இந்திய மற்றும் பிரான்ஸ் அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: குவைத் தீ விபத்து: கொச்சி விமான நிலையத்தில் அஞ்சலி! உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு! - Kuwait Building fire