டெல்லி: 18வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் 7வது மற்றும் கடைசி கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதனிடையே, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் மற்றும் ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் வீட்டில் நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள விரைந்தனர்.
அதேபோல் டெல்லி முதலமைச்சர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பக்வத் மான் ஆகியோர் இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் வீட்டிற்கு விரைந்தார்.
மேலும், தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் பிரிவு தலைவர் சரத் பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி விரைந்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் டிஆர் பாலு கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், இந்த கூட்டத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த கூட்டத்தை தவிர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெமல் புயல் பாதிப்பு மற்றும் கடைசி கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாக்களித்ததை வீடியோவாக வெளியிட்ட பகுஜான் சமாஜ் வேட்பாளர்! வீடியோ வைரல்! - Lok Sabha Election 2024