டெல்லி: நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில், என்டிஏ கூட்டணி ஆட்சி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகிறது.
அதன்படி, டெல்லியில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விரைந்த பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். தொடர்ந்து, மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர், புதிய அரசு பொறுப்பேற்கும் வரை பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் தொடரும்படி கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.
அதேபோல், சரத் பவார், சம்பாய் சோரன், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பங்கேற்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி ராஜினாமா! குடியரசுத் தலைவரின் வலியுறுத்தல் என்ன?