ஐதராபாத் : நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்களவை தேர்தலை 7 கட்டங்களாக நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையத்தால் பிரத்யேகமாக 10 இலக்க எண் கொண்ட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இருப்பினும், சில நேரங்களில், மக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை தவறுதலாக மறந்தோ அல்லது தொலைத்து விடுகின்றனர். மேலும், வாக்காளர் அடையாள அட்டையை நகல் எடுத்து வைக்காமலும் போகலாம். சில சமயங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள புதிய வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை குறித்த நேரத்தில் பெற முடியாமல் போகலாம்.
வாக்காளர் அடையாள அட்டை வைத்து இருந்தாலோ அல்லது இல்லாவிட்டாலோ, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேர்தலில் வாக்களிக்க உரிமை உண்டு. அதன்படி வாக்காளர் அடையாள அட்டை இல்லாத சூழ்நிலைகளில் வாக்காளர்கள் எந்தெந்த அவணங்களை அதற்கு ஈடாக காண்பித்து தங்களைது வாக்குகளை செலுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிப்பது எப்படி?:
வாக்காளர்கள் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை கண்டறிந்தால் அவர்கள் வாக்காளர் அடையாள அட்டையோ அல்லது அதன் நகலோ இல்லாமல் கூட வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா என பார்ப்பது எப்படி?:
செல்போன், மடிக்கணினி அல்லது லேப்டாப் எதுவாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://electoralsearch.eci.gov.in/ என்ற தளத்திற்கு முதலில் செல்ல வேண்டும். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் தானா என்பதை அறிந்து கொள்ள மூன்று விருப்பங்கள் உள்ளன.
முதலில் உங்கள் பெயர், குடும்பப்பெயர், பிறந்த தேதி, மாவட்டம், தொகுதி மற்றும் பிற விவரங்களை வழங்க வேண்டும். இரண்டாவதாக, உங்கள் வாக்காளர் அடையாள எண் மூலமும் கண்டறிந்து கொள்ளலாம். மூன்றாவதாக, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலமும் தேடலாம். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைப் பார்த்தவுடன், நீங்கள் வாக்களிக்கத் தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
வாக்காளர் அடையாள அட்டையை எளிய முறையில் நகல் எடுக்க சிறந்த வழி:
உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் அதேநேரம் வாக்காளர் அடையாள அட்டையின் மூலம் மட்டுமே நீங்கள் வாக்களிக்க விரும்பினால், தேர்தல் ஆணையம் மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வாக்காளர் அடையாள எண்களை வழங்கி வாக்காளர் அடையாள அட்டையின் டிஜிட்டல் நகலை PDF வடிவத்தில் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/login என்ற இணையதள பக்கத்திற்கு சென்று வாக்காளர் அடையாள அட்டையின் எண் உள்ளிட்ட தகவல்களை வழங்கி அதன் மூலம் டிஜிட்டல் வாக்காளர் அட்டையின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
வாக்காளர் அட்டை தவிர்த்து வேறென்ன ஆவணங்கள் செல்லுபடியாகும்:
வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் வாக்காளர்கள் கீழ் காணும் அரசு அங்கீகாரம் பெற்ற ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அது தொடர்பாக 12 ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
1. ஆதார் அட்டை,
2. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் அட்டை,
3. ஓட்டுநர் உரிமம்,
4. பான் கார்டு,
5. இந்திய பாஸ்போர்ட்,
6. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள்,
7. அரசு பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மத்திய/மாநில அரசு அடையாள அட்டை,
8. வங்கி/அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்,
9. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய பதிவாளர் ஜெனரல் வழங்கிய ஸ்மார்ட் கார்டு,
10. தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு,
11. எம்.பி.க்கள்/எம்எல்ஏக்கள்/எம்எல்சிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள்,
12. சமூக நீதி அமைச்சகத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை,
உள்ளிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பெயர் பட்டியலில் புதிதாக இணைந்த வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டையை பெற்று இருக்க வாய்ப்பு இல்லாத சூழலில் இந்த 12 ஆவணங்கள் உதவியாக இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : ஆசியாவின் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நகரமாக மும்பை தேர்வு! பீஜிங்கை பின்னுக்குத் தள்ளி சாதனை! - Asia Billionaire Capital