சென்னை: 30 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்த பெண்ணுக்கு, அதே நேரத்தில் மரணமடைந்த மணமகன் தேவை. சந்தேகமே வேண்டாம், இது திருமணத்திற்கு வரன் தேடும் விளம்பரம் தான். இந்த விளம்பரம் வெளி வந்தது கன்னட நாளிதழில். அதிலும் தாங்கள் சார்ந்திருக்கும் பங்கேரா சாதியில் தான் மாப்பிள்ளை பேய் வேண்டும் எனவும் விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது. விளம்பரத்தைக் கேள்விப்பட்ட நமக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், கர்நாடகாவில் இது மிக சாதாரணம் தான் என குறிப்பிடுகிறார்கள்.
திருமணத்தின் அர்த்ததை சினிமா பாணியில் கடைசிவரை உடன் வருவேன், உயிர் உள்ளவரை துணையாக இருப்பேன் என்னும் வசனங்களாய் கேட்டிருப்போம். ஆனால் இந்த ஊர் மக்கள் இறந்த பின்னும் திருமண உறவை தொடங்க முடியும் என வினோத நடைமுறையை செய்து வருகின்றனர். இந்த நடைமுறை ”பிரேதா மதுவே” (பேய் திருமணம்)என்று அழைக்கபடுகிறது. இவ்வாறு பேய்களுக்குள் திருமணம் நடத்தி வைப்பதை பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர் கேரள மற்றும் கர்நாடகாவின் கடலோரம் வசிக்கும் ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள்.
எந்த பெற்றோர்க்குதான் தன் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கனவுகள் இல்லை. தான் அதிகமாக நேசிக்கும் பிள்ளைகளின் திருமணம் குறித்து அதிகமான கனவுகளை சுமந்து வரும் பெற்றோர்களின் பிள்ளைகளை திடீரென விதி விழுங்கி விட்டால், மிஞ்சுவது அவர்களின் நினைவுகள்தான். அவர்கள் இல்லாத துக்கத்தை பல்வேறு வழிகளில் அனுசரிக்கும் முறை உள்ளது. இது இடம், கலாச்சாரம், மதம், சாதி அடிப்படையில் வேறுபடுவதாக உள்ளது.
பெற்றோர்கள் ஆசையும் ’ஆவி திருமணமும்’: கேரள மற்றும் கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் வசிக்கும் ஒரு சமூகத்தை சேர்ந்த பெற்றோர்கள் உலகத்தை விட்டு சென்ற தன் திருமணம் ஆகாத மகனுக்கும், மகளுக்கும் திருமணம் நடத்தி வைக்கும் வினோத பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். இறந்தவரின் ஆன்மா அமைதியை அடைய வேண்டும் என நாம் செய்யும் சடங்குகள், சம்பிரதாயம் ஏராளம்.
இந்த வகையில் திருமணமாகமல் இறந்துவிட்ட தன் பிள்ளைகளுக்கு திருமண வயது வரும் போது, இறந்த ஆன்மாவுக்கு திருமணமாகாமல் இறந்துபோன மற்றொரு ஆன்மாவை திருமணம் செய்து வைக்கின்றனர். இதன் மூலம் திருமணமாகாத ஆண் மற்றும் பெண்ணின் ஆன்மாவை ஒன்றிணைத்து இருவருக்கும் துணை அமைத்து தருவதாகவும் அவர்கள் இழந்த திருமணம் என்ற வாய்ப்பை வழங்குவதாகவும் இறந்தவர்களின் பெற்றோர்கள் நம்புகிறார்கள் .
திருமணம் சொர்கத்தில் நிச்சியிக்க பட்டவைதான? பங்கேரா சமுகத்தை சேர்ந்த மக்கள், 'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு பூமியில் நிறைவேற்றப்படுகிறது’ என்ற கருத்தை மனமார ஏற்று நடந்து வருகின்றனர். இவர்கள் இறந்த பிறகும் தங்கள் சந்ததியினருக்கு திருமணம் செய்து வைப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் திருமண அமைப்பு சக்தி வாய்ந்த ஆற்றலையும் மரியாதையையும் தருகிறது. அதனால் இறந்தவர் கூட திருமணம் என்னும் அமைப்பில் அனுபவிக்க வேண்டும் என்கின்றனர்.
கனவில் வரும் ஆவிகள்: மேலும் அவ்வாறு திருமணம் ஆகாமல் இறந்தவர்களின் ஆவிக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் உலகில் இருக்கும் வேறு சாதி ஆவிகள், அவர்களை வேட்டையாடிவிடும் என நம்புகின்றனர். அதுமட்டுமின்றி அந்த ஆவிகள் தினமும் குடும்பத்தினர்கள் கனவில் வந்து திருமணத்திற்காக ஏங்குவதை நினைவுப்படுத்துவதாக ஐதிகம் உள்ளது.
தடல் புடலான பேய் திருமணம்: ஒரு வழியாக சரியான ஜோடி பேயை கண்டு பிடித்தவுடன், இந்த பேய்த் திருமணத்திதை நடத்தி கொடுக்கும் பணியில் ஜோதிடர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். ஜோதிடரின் ஒப்புதல் வந்தவுடன், நல்ல நேரம் மற்றும் தேதியைக் கணக்கிட்டு திருமணம் நடத்தப்படுகிறது. மணமகன், மணமகள் என இரண்டு பானைகள் வைத்து உயிருடன் இருந்திருந்தால் என்ன சடங்குகள் நடக்குமோ அவை இரு குடும்பத்தின் முன்னிலையில் நடைபெறுகிறது.
இந்த திருமண விழாவில் முதன்மையான இடம் இறந்தவரின் உடன்பிறப்புகளுக்கு தரப்படுகிறது. அவர்கள்தான் இறந்தவரின் உடலாக இருந்து மணமகன், மணமகளாக இருக்கும் பானைக்கு திருமணம் சடங்குகளை செய்து வைக்க வேண்டும். அதாவது ஆவி தம்பதிகள் மலர்மாலைகளை முதலில் பரிமாறிக் கொள்வர், பின் மணப்பெணாக இருக்கும் பானைக்கு புடவை அணிந்து, குங்குமம் பூசி, கருப்பு நிற முத்துக்கள் மற்றும் மல்லிகைப் பூக்கள் கொண்டு அலங்காரம் செய்யப்படும். இதனையடுத்து மணப்பெண்ணுக்குப் பக்கத்தில் இருக்கும் மற்றொரு பானைக்கு மணமகன் போல் உடையணிந்து வர்ணம் பூசி, பானையின் மேல் தலைப்பாகையுடன் சடங்குகள் நடத்தப்படுகிறது.
பேயாக தொடங்கும் திருமண பந்தம்: திருமணம் முடிந்த கையோடு மணமக்களின் குடும்பத்தினர்கள் உறவினர்கள் அனைவருக்கும் வாழை இலையில் சுவையான விருந்து வைக்கப்படும். மேலும், மணமகன் வீட்டில் திருமணம் நடந்து முடிந்த கையோடு, மணமகள் பானை மணமகனின் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின் தங்கள் குழந்தைகள் உயிருடன் இருந்தால், இரு குடும்பத்தினரும் உறவு பாராட்டுவார்களோ, அதே போன்று இரு குடும்பத்தினரும் பகுவதோடு, விழாக்களிலும் முக்கியத்துவம் வழங்குகின்றனர்.
இதையும் படிங்க:"நான் மனித பிறவியே இல்லை; கடவுள் என்னை பூமிக்கு அனுப்பினார்"