டெல்லி: விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம், காப்பீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 'டெல்லி சலோ' எனும் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஹரியானா, பஞ்சாப் ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் படையென திரண்டு டெல்லி நோக்கி செல்கின்றனர்.
இதனால் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக, பாதுகாப்பு படையினர் விவசாயிகள் மீது, தண்ணீர் பாய்ச்சி, கண்ணீர் புகைக்குண்டு வீசி, ரப்பர் குண்டுகளால் தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதனிடையே, சண்டிகரில் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நித்யானந்தா ராய் ஆகியோரரும், மேலும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மறுபக்கம், பாரதிய கிசான் யூனியனின் (Bharatiya Kisan Union) தலைவர் ஜக்ஜித் சிங் தலிவால் (Jagjit Singh Dallewal) மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்ற விவசாய சங்கத் தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரத்தை தாண்டி நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை, நள்ளிரவு வரை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே, விவசாய சங்கத்தினர் மற்றும் அரசு இடையேயான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டா ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) மாலை ஆறு மணியளவில் விவசாயிகளுடனான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இது குறித்து பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கூறுகையில், இந்த விவகாரத்தில் பஞ்சாப் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தின் முதலமைச்சர் என்கிற முறையில், தான் இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்க கடமைபட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், இந்த பேச்சுவார்த்தை கூட்டம் இந்த வாரத்தில் நடக்கும் மூன்றாவது பேச்சுவார்த்தை என்பதை சுட்டிக் காட்டினார். மேலும், இந்த பிரச்னை குறித்த அனைத்து விசயங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் என்னென்ன நடக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறினார்.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்; மன்னிப்பு கோரிய விவசாய சங்கத்தினர்!