சண்டிகர்: நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கான காப்பீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 'டெல்லி சலோ' என்ற பெயரில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் சங்கத்தினர் டெல்லிக்குள் நுழையாமல் இருக்க, அதிரடிப்படை (RAF), மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) மற்றும் டெல்லி காவல் துறையின் என ஏராளமானோர், டெல்லி சிங்கு எல்லைப் (Singhu Border) பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், பஞ்சாப், ஹரியானா ஆகிய பகுதிகளில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தினரின் பத்திரிகையாளர்களை தாக்கிய நிகழ்வு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பத்திரிகை நிருபர்கள் சிலரை தாக்கியதாகவும், அதில் அவர்கள் பலத்த காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மன்னிப்பு கோரிய விவசாய சங்கத் தலைவர்கள்: இச்சம்பவத்தை தொடர்ந்து விவசாய சங்கத்தினர் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தனர். அப்போது, பாரதிய கிசான் யூனியனின் (Bharatiya Kisan Union) தலைவர் ஜக்ஜித் சிங் தலிவால் (Jagjit Singh Dallewal), மற்ற விவசாய சங்கத் தலைவர்களுடன் இணைந்து பத்திரிகையாளர்கள் மீது நடந்த தாக்குதல்களுக்கு மன்னிப்பு கோரினார்.
அப்போது பேசிய அவர், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடந்தது முற்றிலும் தவறானது என்றும், ஊடகம்தான் இந்த போராட்டத்தை முழு உலக அளவிற்கு எடுத்துச் சென்றது என்றும், ஊடகத் துறையினர் செய்த பணியை வேறு யாராலும் செய்திட முடியாது என்றும் அவர் கூறி, நடந்தவற்றிற்கு ஊடகத் துறையினரிடம் மன்னிப்பு கோரினார்.
பாதுகாப்பு உறுதிப்படுத்துதல்: தொடர்ந்து பேசிய அவர், "போராட்டம் சரியான பாதையில் செல்லும் போதெல்லாம், அதை திசை திருப்பவும், போராட்டத்தை கலைக்கவும் சதி நடத்தப்படுகிறது. எனவே, போராட்டத்திற்கு மத்தியில், ஊடக நிருபர்களை அனைத்து விவசாயிகளும் பாதுகாக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும், ஊடக நிருபர்களின் பாதுகாப்பிற்காக சில ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறிய அவர், இனி எந்த நிருபரும் தாக்கப்பட மாட்டார் என உறுதியளித்தார். மேலும், போராட்ட களத்தின் பத்திரிகையாளர்களின் வாகனத்திற்காக தனி இடம் அளிக்கப்படும் என்றும், பத்திரிகையாளர்களை அடையாளம் காண அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஜக்ஜித் சிங் தலிவால் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரம்; காங்கிரஸ் மனு மீது சண்டிகர் நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!