துங்கர்பூர் : வடமாநிலங்களில் இன்று (மார்ச்.25) ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வர்ணங்களை மற்றவர் மீது பூசி மக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டம் பிலுடா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் ஹோலி பண்டிகை நாளில் விசித்திரமான ஒன்றை நீண்ட காலமாக கடைபிடித்து வருகின்றனர்.
அதாவது ஹோலி பண்டிகையில் வர்ணங்களுக்கு பதிலாக மற்றவர் மீது கற்களை வீசி விநோதமாக கொண்டாடி மகிழ்கின்றனர். இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு கிராம மக்கள் ஒருவர் மற்றவர் மீது கற்களை வீசி ஹோலி பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர். நூற்றாண்டு காலமாக பழங்குடியின மக்கள் இந்த சடங்குகளை பின்பற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிராமத்தில் உள்ள ரகுநாதஜி கோயிலில் திரண்ட மக்கள் மேள தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் இந்த விநோத நிகழ்வை தொடங்கினர். இந்த சம்பவத்தில் ஏறத்தாழ 30 பேருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விநோத நிகழ்வை காண அண்டை கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர்.
இதையும் படிங்க : ரூ.23 லட்சம் பணத்துக்காக 9 வயது சிறுவன் கடத்திக் கொலை! மராட்டியத்தில் நடந்த அட்டூழியம்! - Boy Kidnap And Kill For Ransom