சென்னை: உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவோடு நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாகவுள்ளன. ஒட்டுமொத்த இந்திய மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் வெற்றி யாருக்கு? என்ற கேள்வியின் முடிவு கிடைக்க இன்னும் ஒரு சில நாட்களே மீதம் இருக்கும் நிலையில், நாளை அதாவது ஜூன் 1 மாலை 6.30 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவுள்ளன. இந்த கருத்துக்கணிப்புகளை அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் தங்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடவுள்ளனர்.
கருத்துக் கணிப்பு என்றால் என்ன? வாக்குப்பதிவுக்கு பின் வாக்களர்களிடம் நடத்தப்படும் மாதிரி கணக்கெடுப்பு மற்றும் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வெளியிடப்படும் தகவலே 'Exit Polls' அதாவது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எனக் கூறப்படுகிறது. இந்த கருத்துக் கணிப்பு 100 சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும் ஓரளவு தேர்தல் முடிவை ஒத்து இருக்கும்.
வாக்குப்பதிவின் போது கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டிருப்பது ஏன்? தேர்தல் நடந்துகொண்டு இருக்கும் நேரத்தில், கருத்துக் கணிப்புகளை வெளியிட்டால் அது வாக்காளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வரும் வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது எனவும் இந்திய சட்டம் 1951 விதி குறிப்பிடுகிறது.
இந்த சட்டத்தின்படி வாக்குப்பதிவு தொடங்கிய நாள் முதல் அது முடிவுற்று அதன் பிறகு கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தேதி மற்றும் நேரத்தை அறிவிக்கும். அதன் பிறகே கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டும். அதை மீறும் பட்சத்தில், இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீட்டிக்கப்படும் வகையில் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படலாம்.
கருத்துக் கணிப்பை வெளியிடும் நேரம் மற்றும் தேதி: இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல், ஜூன் மாதம் 1ஆம் தேதி மாலை 6.30 மணி வரையிலும் கருத்துக் கணிப்புகளை அச்சு மற்றும் மின்னணு ஊடகம் உள்ளிட்ட எந்த வகையிலும் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி எக்ஸிட் போல் முடிவுகளை ஜூன் 1, அதாவது நாளை மாலை 6.30 மணிக்கு மேல் வெளியிடலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவு: எப்போது, எங்கு பார்க்கலாம்? நாளை மாலை 6.30 மணிக்கு மேல் அனைத்து ஊடகங்களிலும் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகும். அது மட்டும் இன்றி, இணையதள பக்கங்கள், சமூக ஊடகங்கள் அதிலும் குறிப்பாக எக்ஸ் (X) தளம், Facebook, Instagram மற்றும் YouTube ஆகியவற்றில் அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக் கணிப்பு முடிவுகளை விவரிப்பார்கள். மேலும், ஈடிவி பாரத் சமூக வலைதளப் பக்கங்களில் இது தொடர்பான செய்திகள் உடனுக்குடன் வெளியாகும்.
சட்டசபை மற்றும் இடைத்தேர்தல்: ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு, மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. அதே அட்டவணையின் கீழ், வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த வகையில், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டசபைகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 மாநிலங்களில் இருந்து 25 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் - பீகார் (அஜியோன்-எஸ்சி), ஹரியானா (கர்னால்), ஜார்கண்ட் (கண்டே), திரிபுரா (ராம்நகர்), தெலங்கானா (செகந்தராபாத் கண்டோன்மென்ட்), ராஜஸ்தான் (பாகிடோரா) , கர்நாடகா (ஷாப்பூர்) மற்றும் தமிழ்நாடு (விளவங்கோடு), மேற்கு வங்கத்தில் இருந்து இரண்டு (பகவான்கோலா, பாராநகர்), உத்தரபிரதேசத்தில் இருந்து நான்கு (தாத்ரால், லக்னோ கிழக்கு, கெய்ன்சாரி மற்றும் துத்தி), ஐந்து குஜராத்தில் இருந்து (விஜப்பூர், கம்பட், வகோடியா, மானவதார், போர்பந்தர்) மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து ஆறு (தர்மசாலா, லாஹவுல் & ஸ்பிதி - எஸ்.டி., சுஜன்பூர், பர்சார், காக்ரெட் மற்றும் குட்லெஹார்) - மக்களவைத் தேர்தலின் போது கூட ஒன்றாக நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவி உடையில் பிரதமர் மோடி தியானம்! காலையில் சூரிய பகவான் தரிசனம்! - PM Modi Kanyakumari Visit