டெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தட்டா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி வழக்கு விசாரணையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், வாக்குப்பதிவு இயந்திரங்களின் பதிவாகும் வாக்குகளை தொழில்நுட்பங்களை கொண்டு குறிப்பிட்ட கால அளவில் மாற்றக் கூடியதாக இருப்பதாகவும், மீண்டும் வாக்குச் சீட்டு நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வாக்குச்சீட்டு முறைக்கு அரசு திரும்பிய நிலையில் அதுபோன்ற நடைமுறையை இந்தியாவில் அறிமுகப்படுத்த கோரி தெரிவித்தார். இதை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதிகள் 6 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியில் கடைபிடிக்கப்படும் வாக்குச் சீட்டு முறை 97 கோடி வாக்காளர்களை கொண்ட இந்தியாவில் சாத்தியமா என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று (ஏப்.24) தீர்ப்பு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவிஎம் இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
இவிஎம் இயந்திரங்களின் சேமிப்பு திறன் மற்றும் கட்டுப்பாட்டு அலகுகளில் பொருத்தப்படும் மைக்ரோசிப்கள் மற்றும் பிற அம்சங்கள் குறித்து தொடர்ந்து எழும் கேள்விகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இன்று (ஏப்.24) மதியம் 2 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி இது குறித்து விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் சார்பில் துணை தேர்தல் ஆணையர் நிதேஷ் குமார் மதியம் 2 மணிக்கு நேரில் ஆஜராகி இவிஎம் இயந்திரம் தொடர்பாக கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவிஎம் இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து இதற்கு முன் நிதேஷ் குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விவிபாட், வாக்குப்பதிவு இயந்திர வழக்கு: "தேர்தல் சுதந்திரமாகவும், நியமாகவும் நடப்பதை உறுதி செய்க" - உச்ச நீதிமன்றம்! - Lok Sabha Election 2024