புதுடெல்லி: தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் தமது கணவரிடமிருந்து விவகாரத்து பெற்றிருந்தார். அதன்பின் அவர் ஜீவனாம்சம் கோரி தொடர்ந்த வழக்கில், இடைக்கால ஜீவனாம்சமாக அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்ட நபர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அதில், " முஸ்லிம் பெண் ஒருவர் விவகாரத்து பெறும்போது, அவரது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கோருவதற்கான வழிமுறைகள், முஸ்லிம் பெண்களுக்கான சட்டம் -1986 இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 125 -இன் கீழ், விவகாரத்து பெற்ற முஸ்லிம் பெண் ஜீவனாம்சம் கோர முடியாது. அப்படி கோருவது 1986 சட்ட விதிமுறைகளை மீறுவதாகும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இத்துடன் வழக்கு விசாரணையின்போது, 'முஸ்லிம் பெண்கள் சட்டம் 1986 -இன் படியே, விவகாரத்து பெற்ற முஸ்லிம் பெண் ஒருவருக்கு ஜீவனாம்சம் வழங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும் எனவும்,. இச்சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 125-ஐ ஒப்பிடும்போது, இச்சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது' என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், " குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 125-இன் கீழ், விவகாரத்து பெற்ற முஸ்லிம் பெண்கள் அவரது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கோர முடியும். அத்துடன் இச்சட்டப் பிரிவு திருமண பெண்களுக்கு மட்டுமின்றி, அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும். மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.