டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கபப்ட்டுள்ளார். இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மணீஷ் சிசோடியா விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஜாமீன் மனுக்களை விசாரித்த விசாரணை நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா தரப்பில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார். மேலும், மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை மே 8ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக வாரம் ஒரு முறை தனது மனைவியை சந்திக்க விசாரணை நீதிமன்றம் வழங்கிய அனுமதியை தொடர அனுமதிக்க வேண்டும் என மணீஷ் சிசோடியா தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கப்படாத நிலையில், வாரம் ஒருமுறை மட்டும் மனைவியை சந்திக்க மணீஷ் சிசோடியாவுக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.
கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி மதுபான கொள்கை விவகாரத்தில் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்து இருப்பதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகளால் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து சிபிஐயின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக நுழைந்த அமலாக்கத்துறை, மணீஷ் சிசோடியாவை கைது செய்து விசாரணை நடத்தியது. இதனிடையே டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் மகளும், எம்எல்சியுமான கவிதா ஆகியோரும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிவசேன தலைவர்! - Lok Sabha Election 2024