வயநாடு: கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் இறப்பு விகிதம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. அந்த வகையில், இன்று நான்காவது நாளாக சூரல் மலை மற்றும் முண்டகை பகுதியில் மீட்புப்பணி நடந்து வருகிறது.
அவ்வப்போது ஏற்படும் மோசமான வானிலை காரணமாக மீட்புப்பணியில் இடையூறுகள் ஏற்படுகிறது. இருப்பினும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழுமூச்சுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, 291 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் 240 பேரைக் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கேரளா மாநிலத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆகஸ்ட் 3ம் தேதி வரை 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, மண்சரிவு, வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சூர், கண்ணூர், வயநாடு, காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று (ஆகஸ்ட் 1) கேரளா முதலமைச்சர், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் பேரிடர் பகுதி மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் மற்றும் விம்ஸ் மருத்துவமனையை ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.
தற்போது, வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக தேசிய தொலைநிலை உணர்தல் மையம் (National Remote Sensing Centre), இந்திய செயற்கைக்கோள் தரவுகள் அடிப்படையில் பேரிடர் அபாயம் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிலச்சரிவு அபாயம் குறித்த தகவல்களை வெளியிட்ட NRSC அமைப்பு, இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் 147 மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்