ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவர் சோனியா காந்தி, நாட்டையும் ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி சிதைப்பதாகவும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சுறுத்தி பாஜகவில் இணைய வைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற சதித் திட்டம் நடப்பாதாகவும், நாடும் நாட்டின் ஜனநாயகமும் ஆபத்தில் இருப்பதாகவும் சோனியா காந்தி தெரிவித்தார். நாட்டின் ஜனநாயக அமைப்புகள் சிதைக்கப்படுவதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வேலையின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை, அடக்குமுறைகளை அதிகரிக்கச் செய்ய எந்த வாய்ப்பையும் தவறவிட்டதில்லை என்றும் சோனியா காந்தி தெரிவித்தார்.
தன்னை மிகப் பெரியவர் என நினைத்துக் கொள்ளும் மோடி, தேசத்தின் மாண்பையும், ஜனநாயகத்தையும் சிதைத்து வருகிறார் என்றும் அநீதிக்கு எதிராக அனைவரும் போராடி நியாயம் காண வேண்டும் என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டார். நம் முன்னோர்கள் தங்களது கடும் போராட்டத்தின் மூலம் நாட்டுக்கு சுதந்திரத்தை தேடித் தந்தை நிலையில், தற்போது இந்த ஆட்சி தியாக தீபத்தை மங்கச் செய்ததாக சோனியா காந்தி கூறினார்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.5) காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் விவசாயிகளுக்கு குறைந்த ஆதார விலை நிர்ணயம், அரசு வேலையில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெறுவது, அடுத்த பத்து ஆண்டுகளில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி திறனை இரண்டு மடங்காக உயர்த்துவது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தேர்தல் அறிக்கையில், கட்சித் தாவல் தடை சட்டத்தை வலுப்படுத்துவது, ஜிஎஸ்டி வரிக் கொள்கையில் திருத்தம், பதினொன்று மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொபைல் போன்கள் வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற நிலையில் நாடு முழுவது 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்க உள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதி 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதையும் படிங்க : வீட்டுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்... அலெக்சா மூலம் தங்கையின் உயிரை காப்பற்றிய சிறுமி! - Teen Saves Child Using Alexa