டெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூர், உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏபிஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் ராம் ஆகியோர் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்த விவாதத்திற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக முன்னாள் நீதிபதிகள் மற்றும் மூத்த பத்திரிகையாளர் எழுதியுள்ள கடிதத்தில் "பொதுமக்கள் என்ற முறையில் விவாதம் நடத்த உள்ளோம். அதில் நாங்கள் இரு தரப்பிற்கும் கேள்விகளைக் கேட்க உள்ளோம். மக்கள் உண்மையைத் தெரிந்து கொண்டு வாக்கு செலுத்தவும் இந்த விவாதம் உதவியாக இருக்கும். மேலும், இந்த விவாதத்தில் அவர்கள் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம்" என தெரிவித்து இருந்தனர்.
இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கடிதத்துடன் கூடிய பதிலை வெளியிட்டுள்ளார். அதில், "உங்களது கடிதம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்து கொள்ள தயாராக உள்ளோம். தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகள் என்பதால், பொதுமக்கள் தலைவர்களிடம் கேள்வி கேட்க தகுதியானவர்கள்.
எனவே, நானும் அல்லது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இது போன்ற விவாதத்தில் கலந்து கொள்ள மகிழ்ச்சி அடைகிறோம். பிரதமர் மோடி இந்த விவாதத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார் என்றால் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். உங்கள் முயற்சிக்கு நன்றி. ஆக்கப்பூர்வமான மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க விவாதத்தில் கலந்து கொள்ள எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் விவாதம் நடத்த திட்டமிட்டு அனுப்பிய கடிதத்திற்கு கையொப்பமிடப்பட்ட பதில் கடிதத்தைப் பதிவு செய்து இருப்பதை வரவேற்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 4வது கட்ட மக்களவை தேர்தல் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! எந்தெந்த தொகுதிகளில் யார்.. யார்.. போட்டி! முழு விபரம்! - Lok Sabha Election 2024