வயநாடு (கேரளா): கேரள மாநிலம். வயநாடு மாவட்டத்துக்கு உட்பட்ட முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மூன்று கிராமங்களில் கடந்த திங்கள்கிழமை (ஜுலை 29) நள்ளிரவு கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மண்ணுக்குள் புதைந்தும், கட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் இதுவரை 287 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த தேசத்தையே கலங்கடிக்க செய்துள்ள இப்பெருந்துயர் சம்பவத்தில் பலியானவர்களை கண்டெடுப்பதற்கான மீட்புப் பணிகள் தொடர்மழைக்கு மத்தியிலும் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி.யும், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் வயநாடுக்கு சென்றிருந்தார்.
அங்கு நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூரல்மலைக்கு சென்ற ராகுல் மற்றும் பிரியங்கா, அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரண, மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகளை கவனமாக பார்வையிட்டார். மேலும் மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம கேட்டறிந்தனர்.
அதைத்தொடர்ந்து மெப்படியில் உள்ள அரசு மருத்துவமனைக்கும், சமுதாய மருத்துவ மையத்துக்கும் சென்றவர்கள், அங்கு தங்களது உறவினர்களை பறிகொடுத்து தவித்துவரும் வயநாடு மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, " அரசியல் விவகாரங்களை பேசுவதற்கான இடமோ, நேரமோ இது இல்லை என்று நினைக்கிறேன். நிலச்சரிவால் இங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உதவிகளை எதிர்பார்த்திருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்துவிதமான உதவிகளும் கிடைக்கபெறுவதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்" என்று ராகுல் காந்தி கூறினார்.
#WATCH | On Wayanad tragedy, Congress MP & LoP Lok Sabha, Rahul Gandhi says, " i don't think this is the time for place to talk about political issues. people here require help. the time right now is to make sure that all assistance comes. i am not interested in politics right… pic.twitter.com/10XayCWgRl
— ANI (@ANI) August 1, 2024
மேலும், " ஒட்டுமொத்த தேசத்தின் கவனமும் இன்று வயநாட்டின் மீது திரும்பியுள்ளது. இந்தப் பகுதி மக்களின் அன்புக்கும், மரியாதைக்கும் நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். இம்மக்கள் தங்களின் தந்தையை மட்டும் இழந்து வாடவில்லை. மாறாக தங்களின் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துவிட்டு தவிக்கின்றனர். இவர்களை பார்க்கும்போது, என் தந்தை இறந்தபோது எப்படி துயரமாக உணர்ந்தேனோ, அதேபோன்று மிகவும் வருத்தமாக உணர்கிறேன்" என்றும் ராகுல் உருக்கமாக கூறினார்.
பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, "நிலச்சரிவால் பெருந்துயருக்கு ஆளாகி உள்ள வயநாடு மக்களுடன் நாங்கள் இன்று நாள் முழுவதும் இருந்தோம். இத்துயரத்தில் இருந்து அவர்கள் மீளவும், கடுமையான இந்த நேரத்தில் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கவும் நாங்கள் அவர்களுடன் இங்கு இருக்கிறோம். ஏனெனில் இதுபோன்ற துன்பங்களுக்கு ஆளாகும் மக்களின் வலிகளை நம்மால் மட்டுமே உணர முடியும். ஹிமாசலப் பிரதேசத்திலும் இதேபோன்ற துன்பியல் நிகழ்வு நடந்துள்ளது.
நிலச்சரிவால் தங்களின் உறவுகளை. உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு எவ்வாறு உதவிலாம் என்றும், குறிப்பாக பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் மறுவாழ்வுக்கு எப்படி உதவலாம் என்பது குறித்து நாளைக்கு ஆலோசிக்க உள்ளோம்" என்று பிரியங்கா காந்தி கூறினார்.
இதையும் படிங்க: கேரளாவை தொடர்ந்து ஹிமாசலப் பிரதேசத்திலும் இயற்கை பேரிடர்... மூன்று பேர் பலி;39 பேரை காணவில்லை