டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் உடன் இருந்தனர்.
அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காந்தி குடும்பத்தின் நெருங்கிய விசுவாசியுமான கிஷோரி லால் சர்மா அமேதி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். மொத்தம் 80 மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்திற்கு 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
இதில் மே 20ஆம் தேதி நடைபெறும் 5வது கட்ட தேர்தலில் லக்னோ, ரேபரேலி, அமேதி உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், இன்றுடன் (மே.3) நிறைவு பெறுகிறது. இதையடுத்து அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மாவும், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
முன்னதாக ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ரேசில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது. இதையடுத்து காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியை களமிறக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்திக்கு போட்டியாக பாஜக தரப்பில் உத்தர பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக இருந்த தினேஷ் பிரதாப் சிங் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிந்து பாஜகவில் இணைந்தார். அதையடுத்து, கடந்த 2019 மக்களவை தேர்தலில் சோனியா காந்தியை எதிர்த்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
தற்போது உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் தினேஷ் பிரதாப் சிங் அமைச்சராக அங்கம் வகித்து வருகிறார். அதேபோல், அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவை எதிர்த்து பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி போட்டியிடுகிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் போட்டியிட்டு ஸ்மிரிதி ராணியிடம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து அவர் கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் மூலம் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த முறையும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாவது கட்ட தேர்தலின் போது வயநாடு மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது.
இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு போட்டியாக உ.பி. அமைச்சரை களமிறக்கும் பாஜக! யார் இந்த தினேஷ் பிரதாப் சிங்? - Rae Bareli BJP Candidate