டெல்லி: பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரில் இன்று (ஜன.30) மேயர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணி அதாவது காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப், பாஜக சார்பில் மனோஜ் சோங்கர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு 20 வாக்குகளும், பாஜகவிற்கு 16 வாக்குகளும் கிடைத்த நிலையில், திடீரென காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிப்பு வெளியாகியது.
இதனால் இத்தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றார் என தேர்தல் அதிகாரி அறிவித்தார். இந்த நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டார் என்று ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், “சண்டிகர் மேயர் தேர்தலில் எந்த மோசடியும் நடைபெறாமல் இருந்திருந்தால், இந்தியா கூட்டணி தனது வெற்றியை பதிவு செய்திருக்கும். இந்த நாள் ஜனநாயகத்திற்கான கருப்பு நாள். பாஜக தங்களது வேட்பாளரை பலத்தால் தேர்ந்தெடுத்துள்ளது.
பாஜக வெற்றி பெறுவதற்கு எந்த நிலைக்கும் செல்வார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று உணர்கிறேன். அதனால் அவர்கள் எதிர்கட்சிகளை குறிவைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்று தெரிவித்தார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் ஒரு வீடியோவை பகிர்ந்து அதில் பாஜக ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளத்தில், பட்டப்பகலில் தேர்தலில் ஏமாற்று வேலை நடந்திருப்பதாகவும், அதை செய்தவர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் எந்த எல்லைக்கும் செல்லலாம். இது மிகவும் கவலையளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து தேர்தலில் இந்தியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என அறிவித்ததை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தை அணுகப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்ததைத் தொடர்ந்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு அவசர வழக்காக நாளை (ஜன.31) நீதிபதிகள் முன் விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: 7 நாட்களில் நாடு முழுவதும் சிஏஏ அமல் : மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை! சாத்தியமாகுமா?