டெல்லி: மத்திய அரசு தேர்வுகளில் வினாத் தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.), ரயில்வே தேசிய தேர்வுகள் முகமை உள்ளிட்டவை நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க அரசுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு மசோதா 2024ஆம் ஆண்டு இயற்றப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இருந்த நிலையில், அவர் அனுமதி அளித்தார். இந்நிலையில், தற்போது இந்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்த மசோதாவின் படி அந்த தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி எந்த ஒரு நபரும் தேர்வு வினாத் தாளை கசிய விட்டால் குறைந்தபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனையும் 10 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தேர்வு வினாத் தாள் கசிய விடப்படுவது குறித்து அறிந்தும், புகார் அளிக்காத தேர்வு சேவை வல்லுனர்களுக்கு 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் தேசிய தேர்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் 1 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் ஜாமீனில் வெளியே வரமுடியாத படி இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. நீட் தேர்வு முடிவுகளில் உள்ள குளறுபடிகளை அடுத்து மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த மனுக்கள் தொடர்பாக தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் வழங்கி ஜூலை 8ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. முன்னதாக நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வு ஏற்படும் முறைகேடுகளை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: 4 மாநில இடைத்தேர்தல்: பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இருக்குமா? நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதி அமைச்சர்கள் கூட்டம்! - Pre Budget meeting