கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி சஞ்சய் ராய் என்பவரைக் கைது செய்தனர்.
தொடர்ந்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 13) உத்தரவிட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக பாரத நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அப்போது, கொல்கத்தா காவல்துறையிடம் இருந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐ பெற்றது. தொடர்ந்து, சிபிஐ விசாரணை நேற்று முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட மாநிலத்தின் பல்வேறு மருத்துவர்களும் பல இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, சம்பவம் நடைபெற்ற ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர்.
இதில் மருத்துவமனையின் அவசரப் பிரிவு முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும், இதில் கொல்கத்தாவின் வடக்கு மண்டல துணை காவல் ஆணையர் அபிஷேக் குப்தா போராட்டக்காரர்களின் தாக்குதலுக்கு உள்ளானார். இதனால் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. மேலும், கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின்படி, பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதாக 9 பேரை கொல்கத்தா போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 5 மருத்துவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதன்படி, கொல்கத்தாவின் சால்ட் லேக் சிஜிஓ வளாகத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மருத்துவர் சஞ்சய் வசிஸ்தா ஆஜரானார். அதேநேரம், நெஞ்சு சார்ந்த மருத்துவத்துறை மருத்துவர் அருனபா டுட்டா சவுத்ரி சம்மனுக்கு பதில் அளிக்கவில்லை.
மேலும், மருத்துவமனை செவிலியர்களிடத்திலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதேநேரம், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கொல்கத்தா போலீசார் சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைத்தனர். மேலும், சிபிஐ தரப்பிலும் மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று சிஜிஓ வளாகத்தில் சிபிஐ சிறப்புக் குழுவுடனான நீண்ட நேர ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
அது மட்டுமல்லாமல், இன்று மதியம் 1.30 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் வீட்டிற்கு சிபிஐ கூடுதல் இயக்குனர் தலைமையிலான நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழு சென்றது. அங்கு அவரது பெற்றோரிடமும் சிபிஐ குழு விசாரணை மேற்கொண்டது.
அப்போது, மத்திய ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களிடம் தங்களுக்கு எப்போது சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தது, மருத்துவக் கல்லூரிக்குச் சென்ற போது என்ன நடந்தது, அங்கு என்ன கூறினார்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்; நடிகைகள் சமந்தா, ஆலியா பட் கடும் கண்டனம்!