டெல்லி : தலைநகர் டெல்லியில் தனியார் நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தக மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டம் நாட்டின் சட்டம் என்றும், அது கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்றார்.
மேலும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படு என்றும் அது தொடர்பான எந்தவித குழப்பமும் வேண்டாம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். குடியுரிமை திருத்த சட்டம் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி என்றும் பல்வேறு பிரச்சினைகளால் பிளவுபடும் நாட்டில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படும் போது, அவர்கள் அகதிகளாக இந்தியாவில் வரவேற்கப்பட்டு, அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என காங்கிரஸ் உறுதியளித்ததாகவும் அமித் ஷா கூறினார்.
மேலும், குடியுரிமை திருத்த சட்டம் என்பது அகதிகளாக வரும் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதே தவிர்த்து நாட்டு மக்களின் குடியுரிமையை பறிப்பது அல்ல என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இந்தியாவில் உள்ள சிறுபான்மையின மக்கள், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் உள்ளவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு துண்டாடப்படுவதாகவும், எவரது குடியுரிமையையும் பறிக்கும் அம்சம் குடியுரிமை திருத்த சட்டத்தில் இல்லை என்றும் அமைச்சர் அமித் ஷா கூறினார்.
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் நோக்கில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது என்றும் அவர் கூறினார். கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை திருத்த சட்ட மசோதாவில், "வங்கதேசம், பாகிஸ்தான், அப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னதாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள், பாரசீகர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்பட இஸ்லாமியர் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க சட்டம் வழிவகை செய்வதாக தெரிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி இந்த சட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்படமால் இருந்து வருகிறது.
இந்த சட்டத்தில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை என்பதால், 2019 முதல் இஸ்லாமியர்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் மக்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக மசோதா சரத்தில் தெரிவிக்கப்படாததால் தமிழக அரசும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இதையும் படிங்க : பாஜகவின் 3வது ஆட்சியில் இந்தியா வேகமாக முன்னேறும்: மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு