ஜபுவா : மத்திய பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பழங்குடியின மக்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் எதிர்வரும் மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கூடுதலாக 370 வாக்குகள் பதிவாகி இருப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் பாஜக 370 இடங்களை கைப்பற்றும் நாடளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
நாடு முழுவதும் 370 தொகுதிகளில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதில் தாம் உறுதியுடன் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். தேர்தல் பரப்புரைக்காக தான் ஜபுவா மாவட்டத்திற்கு வரவில்லை என்றும், அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மாநில மக்களுக்கு மீண்டும் சேவையை வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்க வந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாஜக தலைமையிலான டபுள் என்ஜின் அரசு இரு மடங்கு வேகத்தில் மத்திய பிரதேசத்தில் பணியாற்றி வருவதாகவும் இந்த பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக 7 ஆயிரத்து 550 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததாகவும் பிரதமர் மோடி கூறினார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களை நீண்ட நாட்களாக புறக்கணித்து வருவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
தங்களது தோல்வியை அறிந்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடைசி தந்திரத்தை கையாள்வதாகவும், மேலும் கொள்ளையடிப்பது, நாட்டை பிளவுபடுத்துவதே காங்கிரசின் குறிக்கோள் என்றும் பிரதமர் கூறினார். பழங்குடியின மக்களின் ஆரோக்கியத்திற்கான இரத்த சோகை நோய் எதிர்ப்புக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும் மாறாக ஓட்டுக்கான பரப்புரையில் பாஜக ஈடுபடவில்லை என்றும் பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக கடந்த ஆண்டு தேசிய இரத்த சோகை ஒழிப்பு திட்டம் 2047 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பணியை மத்திய அரசு தொடங்கி வைத்தது. பழங்குடியின மக்களிடையே இரத்த சோகை எதிர்ப்பு மற்றும் ஆரோக்கிய வாழ்வியல் முறைக்கான பிரச்சினைகளின் தீர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : மத்திய ஆயுத படையின் கான்ஸ்டபிள் தேர்வை தமிழில் எழுதலாம் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!