லக்னோ : நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஜூன் 1ஆம் தேதி 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், பாஜகவின் 10வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கேபினட் அமைச்சர் ஜெய்வீர் சிங் தாக்கூருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவர் மணிப்பூரி தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவை எதிர்த்து களம் காணுகிறார்.
அதேபோல் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனும் முன்னாள் எம்.பியுமான நீரஜ் சேகர் பல்லியா தொகுதியில் போட்டியிடுகிறார். 9 வேட்பாளர்களை கொண்ட பெயர் பட்டியலில் 7 இடங்கள் உத்தர பிரதேசத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளன. அலகாபாத் தொகுதியில் சிட்டிங் எம்.பி ரீடா பகுகுணாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக நீரஜ் திரிபாதி அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அதேநேரம் ரேபரலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை பாஜக மிகவும் சஸ்பென்ஸாக வைத்து உள்ளது. இதில் அமேதி தொகுதியில் மீண்டும் ஸ்மிருதி ராணி போட்டியிட உள்ளார். அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக காணப்படும் ரேபரலி தொகுதியில் யார் களம் காண உள்ளார் என்பதை வெளியிடாமல் பாஜக ரகசியம் காத்து வருகிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியும் அமேதி மற்றும் ரேபரலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடாமல் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் ரேபரலியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த சோனியா காந்தி, இந்த முறை மாநிலங்களவைக்கு தேர்வானார்.
இதன் காரணமாக ரேபரலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்து உள்ளது. அதேநேரம் அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பதஞ்சலி விளம்பர வழக்கு: பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க மறுப்பு! ஏன் அலட்சியம் காட்டக் கூடாது?- உச்சநீதிமன்றம் கேள்வி! - Patanjali Advertising Case