ஹைதராபாத்: கொல்கத்தா பெண் மருத்துவரின் கொடூர கொலைக்கு நீதி கேட்டு போராடிய மேற்கு வங்காள நடிகை மிமி சக்ரவர்த்திக்கு, சமூக வலைதளங்களில் பாலியல் மிரட்டல்களும், ஆபாச குறுஞ்செய்திகளும் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவை உலுக்கிய பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதற்கு நீதி கேட்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் கொல்கத்தாவில் இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றமும் தாமாக விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த நிலையில், பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 14ம் தேதி கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியுமான மிமி சக்கரவர்த்தி மற்றும் நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர். அது தொடர்பான புகைப்படங்களை மிமி சக்கரவர்த்தி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் சிலர் அவருக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து, ஆபாசமாக மெசேஜ்களை அனுப்புவதாகவும் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு, சைபர் க்ரைமை டேக் செய்துள்ளார். இதை கண்ட நடிகையின் ஆதரவாளர்கள், மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர்.
மேலும், மிமி சக்கரவர்த்தி அதுகுறித்து வெளியிட்டிருந்த பதிவில், கொலை செய்யப்பட்ட பெண் மருத்துருவருக்கு நீதி கேட்டு நாம் போராடி வருகிறோமா? விஷமுள்ள ஆண்களால், பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்கள்கூட இயல்பாக்கப்பட்டுள்ளன. அவர்கள் கூட்டத்தோடு மறைந்திருந்து நீதிக்காக போராடுகிறார்கள்'' என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தவெக கொடி அறிமுக விழாவிற்கு காவல்துறை அனுமதி மறுப்பா?