பாங்குரா: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலம் பங்குரா மாவட்டத்தில் உள்ள பிஷ்ணுபூர் தொகுதியில் முன்னாள் தம்பதிகளான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் சுஜாதா மோண்டலும், பாஜக எம்பி சௌமித்ரா கான் இருவரும் ஒரே தொகுதியில் போட்டியிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்தியா முழுவதும் வேட்பாளர் அறிவிப்பு, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் என சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள பிஷ்ணுபூர் தொகுதிக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திரிணாமுல் காங்கிரஸ் சுஜாதா மோண்டாலை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதே சமயம் இந்த மாதத் துவக்கத்தில் பாஜக பிஷ்ணுபூர் தொகுதியின் வேட்பாளராக சௌமித்ரா கானை அறிவித்திருந்தது.
கடந்த 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் உறுப்பினராக சௌமித்ரா கான் இருந்தபோது, சுஜாதா மோண்டல் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இருவரும் சந்தித்த போது, காதல் மலர்ந்து நெருங்கிப் பழகி திருமணம் செய்து கொண்டனர். அப்போது, சுஜாதா மோண்டல் சௌமித்ரா கானின் தூண் என்று வர்ணிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கான் 2019ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பாஜகவிற்கு மாறினார்.
ஆனால், 2020ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் அரசியலில் ஈர்க்கப்பட்டு, 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் டிஎம்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். இதனால் 10 ஆண்டு காலக் காதல் கதை அரசியல் லட்சியத்திற்குப் பலியானதாகக் கூறப்படுகிறது. பின்னர், சில கருத்து வேறுபாடு காரணமாக மகிழ்ச்சியான தம்பதியின் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
மனைவி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது எனவும், இதனால் விவாகரத்து செய்யப்போவதாகவும் சௌமித்ரா கான் அறிவித்து ஆவணங்களை அனுப்பி வைத்தார். இந்த சம்பவம், அவருடைய உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனையடுத்து, சுஜாதா திரிணாமுல் கட்சிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயல்பட்டது மட்டுமின்றி, மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜிக்கு நெருக்கமாகவும் செயல்பட்டு வந்தார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு, மக்களவைச் சீட்டைப் பெற்றுள்ளார். மேலும், முன்னாள் கணவர் மனைவி இருவரும் ஒரே தொகுதியில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்திய கூட்டணியில் பிரிந்து தனித்துப் போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ள நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகன்(Nephew) அபிஷேக் பானர்ஜி, நடிகர் தீபக் அதிகாரி, மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட மக்களவைத் தேர்தலுக்கான 42 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலைத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி பிரிகேட் பரேட் மைதானத்தில் நேற்று வெளியிட்டது.
இதையும் படிங்க: திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு.. நடிகை கஸ்தூரி கூறும் காரணங்கள் என்ன?