குவஹாத்தி (அஸ்ஸாம்): வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு 1935 இல் இயற்றப்பட்ட முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் பதிவு சட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில், 89 ஆண்டுகளாக அமலில் உள்ள இச்சட்டத்தை ரத்து செய்யவும், முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் குறித்த பதிவை கட்டாயமாக்கவும் வழிவகை செய்யும் மசோதா, (முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் மசோதா 2024) அண்மையில் அஸ்ஸாம் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று இம்மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, அதன் முடிவில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
"முஸ்லிம் திருமண பதிவுகள் நடைமுறையில் மதகுருமார்களின் (Qazi) தலையீட்டை தடுக்கும் விதத்திலும் மாநிலத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் நோக்கிலும் இப்புதிய. சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது" என்று அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
ஆனால், முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் பதிவு சட்டம் 1935 -ஐ ரத்து செய்வதற்கு அஸ்ஸாம் மாநில எதிர்க்கட்சியான அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. " நாங்களும் குழந்தை திருமணத்துக்கு எதிரானவர்கள்தான்.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலமே குழந்தை திருமணங்களை தடுக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல், அந்தச் சட்டத்தையே மாநில அரசு ரத்து செய்கிறது. பாஜக அரசின் இந்நடவடிக்கையை எதிர்த்து, நீதிமன்றத்துக்கு செல்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை" என்று அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் அமினூல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் பதிவு சட்டம் 1935 -க்கு மாற்றாக, அஸ்ஸாம் மாநில சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் மசோதா 2024 சட்டமாக்கப்பட்டால், முஸ்லிம் சமூகத்தில் நடைபெறும் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் குறித்து அரசாங்கத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும்.
நாட்டின் முதல் மாநிலமாக பொது சிவில் சட்டத்தை உத்தரகாண்ட் மாநிலம் நிறைவேற்றியுள்ளது. அதனையடுத்து இச்சட்டத்தை நிறைவேற்றும் முனைப்பில் அஸ்ஸாம் மாநில அரசு உள்ளது. இந்த நிலையில், முஸ்லிம் திருமணங்கள், விவாகரத்துகள் குறித்த பதிவை கட்டாயமாக்கும் மசோதா அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆந்திராவில் ராஜ்யசபா எம்பிக்கள் 8 பேர் ராஜினாமா? - ஜெகன் மோகனுக்கு அடுத்த அதிர்ச்சி..!