டெல்லி: 18வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26ஆம் தேதி 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு 2வது கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், அசாம், குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடகா, கோவா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 மக்களவை தொகுதிகளுக்கு இன்று (மே.7) 3வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
மக்களவை தேர்தல் நடைபெறும் மாநிலம் மற்றும் தொகுதி விவரம்:
குஜராத், கோவா, தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக இன்று மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, அசாமில் நான்கு இடங்களிலும், பீகாரில் ஐந்து இடங்களிலும், சத்தீஸ்கரில் ஏழு தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்தில் எட்டு இடங்களிலும், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகளிலும், உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகளிலும் மற்றும் மேற்கு வங்கத்தில் நான்கு இடங்களிலும் 3வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றன.
நட்சத்திர தொகுதி மற்றும் வேட்பாளர்கள்:
குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று (மே.7) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் காந்திநகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தரப்பில் சோனல் ராமன்பாய் படேல் போட்டியிடுகிறார்.
காந்திநகர் தொகுதியை தவிர்த்து மகாராஷ்டிர மாநிலம் பரமதி தொகுதியும் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அங்கு அண்மையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பாஜகவுன் கூட்டணி சேர்ந்த துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே களம் காணுகிறார்.
இது தவிர மத்திய பிரதேசம் மாநிலம் விதிஷா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பானு பிரதாப் சர்மா களம் காணுகிறார். அதேபோல் குணா தொகுதியில் மத்திய சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா போட்டியிடுகிறார்.
பீகார் மாநிலம் தார்வத் தொகுதியில் மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி போட்டியிடுகிறார். கர்நாடக மாநிலம் ஹவேரியில் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை களம் காணுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் ஆனந்த சுவாமி களமிறக்கப்பட்டு உள்ளார்.
முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிலவரம்:
ஏப்ரல் 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் 66.14 சதவீத வாக்குகள் பதிவாகின. அதேபோல் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த 2வது கட்ட மக்களவை தேர்தலில் 66.71 சதவீத வாக்குகள் பதிவாகின. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் முதல் மற்றும் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவில் முறையே 70% மற்றும் 69.64 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதையும் படிங்க: ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்! அமலாக்கத்துறை கைது எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு! என்ன திட்டம்? - Hemant Soren Released