பாட்னா : பீகாரில் ஜேடியு - ஆர்ஜேடி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி வகித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகா ஜேடியு - ஆர்ஜேடி, காங்கிரஸ் இடையிலான கூட்டணியை முறிந்தது. இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை மாநில அளுநரிடம் நேற்று (ஜன. 28) நிதிஷ் குமார் வழங்கினார்.
தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த நிதிஷ் குமார், அன்று மாலையே மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை முதலமைச்சர்களாக பாஜகவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா மற்றும் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
மேலும், நிதிஷ் குமாருடன் சேர்த்து 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், நிதிஷ் குமார் தலைமையில் இன்று (ஜன. 29) முதலாவது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணை முதலமைச்சர்கள் விஜய் குமார் சின்ஹா, சாம்ராட் சவுத்ரி உள்ளிட்ட 8 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி 29ஆம் தேதிக்குள் முடிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக பிப்ரவரி 5ஆம் தேதி மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், புதிய அமைச்சரவையில் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அமைச்சரவை கூட்டத்தில் 4 வரைவு அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக அதில் இரண்டு பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து சார்ந்தது என்றும் மீதமுள்ள இரண்டு நிதி சார்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குள் பீகார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது வரை 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், விரைவில் அதன் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் நிதிஷ் குமார் தொடர்ந்து உள்துறை பொறுப்பை கவனிப்பார் என்றும் ஏனை பொறுப்புகள் மற்ற அமைச்சர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கூட்டணியில் இருந்தாலும் தங்களது மாநிலங்களில் தனித்து போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் அறிவித்தது இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நிதிஷ் குமாரும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி இருப்பது அக்கூட்டணிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்பு! 9வது முறை முதலமைச்சர்!