அரியலூரில் முறையான திட்டமிடல் இல்லாமல் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்.. சிரமத்திற்கு உள்ளான இளைஞர்கள்..!
Published : Dec 16, 2023, 4:51 PM IST
அரியலூர்: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (டிச.16) நடைபெற்றது. இந்த முகாமில் ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்றனர். மேலும், பல முன்னணி நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்றனர்.
முன்னதாக, வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்களின் வசதிக்காகப் பந்தல் அமைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் பந்தலில் தேங்கியிருந்த மழைநீர் பந்தலில் இருந்து வடிந்துகொண்டே இருந்ததால், இளைஞர்கள் அமர்வதற்குச் சிரமம் ஏற்பட்டது. இந்த முகாமிற்காக அதிகாரிகளிடத்தில் முறையான திட்டமிடுதல் இல்லாத காரணத்தினால் மைதானம் முழுவதும் சேறும் சகதியுமாகக் காணப்பட்டது. இதனால் முகாமில் பங்கேற்ற இளைஞர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞர்கள் மட்டுமின்றி முகாமில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முன்வந்த நிறுவனங்களும் போதிய வசதிகளின்றி சிரமப்பட்டன. இது போன்ற நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்களை மாவட்ட நிர்வாகம் சரியாகத் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும் என்று முகாமில் பங்கேற்ற இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.