"அந்த மனசு தான் சார் கடவுள்" - மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றிய இளைஞர்! - குரங்கு
Published : Oct 25, 2023, 7:41 AM IST
பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி மலைப்பகுதியை சேர்ந்தவர்கள் கட்டட தொழிலாளி பாபு மற்றும் கலா ராணி தம்பதியர். இவர்களது இரண்டாவது மகன் நிதீஷ் குமார் (வயது 19). நேற்று (அக். 24) இரவு இவரது வீட்டின் அருகே உள்ள மரத்தில் இரண்டு குரங்குகள் சண்டை போட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அதில் ஒரு குரங்கு மரத்தில் இருந்து தவறி கீழே விழும் போது, மின்சார கம்பியின் மீது விழுந்து, மின்சாரம் தாக்கியது. அதனைக் கண்ட நிதிஷ் குமார் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த குரங்கிற்கு முதல் உதவி செய்தார். நிதிஷ் அந்த குரங்கின் உயிரைக் காப்பாற்ற தனது மூச்சுக் காற்றை குரங்கின் வாயில் விட்டு காப்பாற்றினார்.
அதன் பிறகு உடனடியாக அந்தக் குரங்கு சுயநினைவிற்கு வந்தது. தன் மூச்சுக் காற்றை கொடுத்து குரங்கின் உயிரை காப்பாற்றிய சம்பவத்தை நிதிஷ் குமாரின் நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். தற்போது அந்த இளைஞருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.