இருசக்கர வாகனத்தில் புகுந்த 8 அடி சாரைப்பாம்பு.. துணிச்சலாக பிடித்து வனப்பகுதியில் விட்ட இளைஞர்! - சாரப்பாம்பு
Published : Oct 22, 2023, 10:21 AM IST
வேலூர்:ஆற்காடு அருகே இருசக்கர வாகனத்தில் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரப்பாம்பை துணிச்சலாக பிடித்து வனப்பகுதியில் விட்ட இளைஞரை அங்கிருந்த மக்கள் பாராட்டினர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ஹசன்பூரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரிஸ்வான் அரவிந்த் (20). இவர் தனது இருசக்கர வாகனத்தை தனது பகுதியில் இயங்கி வரும் தேநீர் கடையில் நிறுத்திவிட்டு, தேநீர் அருந்த சென்றுள்ளார்.
தேநீர் அருந்திவிட்டு திரும்பி வந்து இருசக்கர வாகனத்தை எடுக்க முற்பட்டபோது, 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு இருசக்கர வாகனத்தின் என்ஜின் பகுதியின் உள்ளே சிக்கி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். இதையடுத்து அதே பகுதியில் வசிக்கும் அசேன் என்ற இளைஞர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் சிக்கி இருந்த சாரைப்பாம்பை துணிச்சலாக செயல்பட்டு வாகனத்திலிருந்து வெளியே எடுத்துள்ளார்.
இதனை அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். பின் அந்த இளைஞர் பாம்பை அதே பகுதியில் உள்ள காப்புக்காடு வனப்பகுதிக்குச் சென்று விட்டு வந்துள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.