ஆட்சியர் அலுவலகத்தில் அணிலை பிடிக்க அட்ராசிட்டி செய்த பெண்… தேனியில் சுவாரஸ்யம்!
Published : Oct 31, 2023, 6:45 PM IST
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது தேனியைச் சேர்ந்த பெண் ஒருவர் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் பையில் வைத்திருந்த அணிலைப் பார்த்த போலீசார் அதனுடன் செல்பி எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டனர்.
தங்கள் வீட்டில் செல்லப் பிராணியாக அணிலை வளர்த்து வருவதாகக் கூறிய பெண்மணி, போலீசார் செல்பி எடுக்க ஆசைப்பட்டதால் அணிலை அவரிடம் கொடுத்தார். அப்போது திடீரென அணில் அங்கிருந்து ஓடி அருகிலிருந்த மரத்தில் ஏறிக் கொண்டது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்மணி வேகமாக ஓடிச் சென்று மரத்தில் ஏறிக்கொண்ட அணிலை "கீழே இறங்கி வாடா" என மரத்தின் அடியில் கூப்பிட்டவாறே நின்று கொண்டிருந்தார். பின்னர் தன்னுடன் வந்தவர்கள் உதவியுடன் அணிலைப் பிடிப்பதற்காக மரத்தின் கிளைகளைப் பிடித்து அசைத்துப் பார்த்து முயற்சி செய்தும் அணில் கீழே வருவதாக இல்லை.
பின்னர் மனம் மாறி மரத்திலிருந்து கீழே இறங்கி வந்த அணில், அங்கிருந்து வேகமாக ஓடி மரங்கள், செடிகள் நிறைந்திருக்கும் பகுதிக்குள் ஓடத் தொடங்கியது. அந்த அணிலைத் துரத்தி ஓடிய பெண்மணி இறுதியாக அணிலைப் பிடித்து விட்டு நிம்மதி பெருமூச்சு விட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அணிலைப் பெண் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.