கூடலூர் தேயிலைத் தோட்டத்தில் அணிவகுத்த யானைகள்.. வைரலாகும் வீடியோ! - public demand to drive away the elephants
நீலகிரி:கூடலூர் பகுதி, முதுமலை வனப்பகுதி மற்றும் கேரளா வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அதிக அளவில் வனவிலங்குகள் ஊருக்குள் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடலூர் பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் தாக்கி உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.
எனவே ஊருக்குள் சுற்றித்திரியும் இந்த காட்டு யானைகளை உயிர் பலி ஏற்படும் முன்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டி, அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்தக் காட்டு யானைகள் தேயிலைத் தோட்டங்களில் சுற்றித்திரிவதால் தேயிலைத் தோட்ட பணிக்குச் செல்ல பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக இந்த காட்டு யானைகள், கூடலூர் அருகே உள்ள கொலப்பள்ளி தட்டாம் பாறை பகுதியில் சுற்றித்திரிகின்றன. நேற்று இதே மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளியின் சமையல் அறையை உடைத்து அரிசி மற்றும் இதர பொருட்களை யானைகள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரையில் அண்மை காலமாக காட்டெருமை, காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் நகரப் பகுதிகளில் சுற்றித்திரியும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வைரலாகி வருகிறது.