தடாகம் அருகே நள்ளிரவில் ஊருக்குள் வரும் காட்டு யானை.. தொடர் சேதங்களை விளைவிப்பதாக பொதுமக்கள் வேதனை! - வனத்துறை
Published : Nov 18, 2023, 1:59 PM IST
கோயம்புத்தூர்: மலை மற்றும் வனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் அவ்வப்போது நீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி, ஊருக்குள் வருவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு ஊருக்குள் வரும் காட்டு யானைகள், விளைநிலங்களை சேதப்படுத்திச் செல்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு தடாகம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, தடாகம் அடுத்த வரப்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் வாழை மரங்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது. மேலும் ராமநாதபுரம் பகுதியில் உள்ள சண்முகம் தோட்டத்தில் புகுந்த காட்டு யானை, மாடுகளுக்கு வைத்திருந்த தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியுள்ளது.
அதனையடுத்து, அதே பகுதியில் உள்ள மற்றொரு தோட்டத்தில் மின் வேலி மற்றும் வாழை மரங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளது. அப்பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி, ஊருக்குள் புகுந்து இவ்வாறு சேதங்களை ஏற்படுத்தி வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், வனத்துறையினர் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், ஒற்றை காட்டு யானை ஊருக்குள் வலம் வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.