பேரணாம்பட்டு அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்! - elephants damaged the crops
Published : Dec 1, 2023, 7:35 AM IST
வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த கோட்டையூர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
இதனால் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்கு வந்து செல்கிறது. மேலும், யானைகள் சிறுத்தைகள் மற்றும் காட்டுப்பன்றிகளால் அவ்வப்போது விவசாய நிலங்கள் சேதம் அடைந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று (நவ.30) கிராமத்தில் உள்ள சீனிவாசன் என்பவரின் நிலத்தில் காட்டு யானைகள் புகுந்து அவர் வளர்த்து வந்த தென்னை மரம், வாழை மரம் மற்றும் துவரைச் செடிகளை மிதித்து நாசம் செய்துள்ளது.
அதைத்தொடர்ந்து, அதே பகுதியில் முனியம்மாள் என்பவருடைய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் தீவனப் பயிர்கள், கம்பங்கள் மற்றும் பைப்புகளை சேதப்படுத்தியுள்ளது. காட்டு விலங்குகளால் விவசாய நிலங்கள் சேதம் அடைந்தும் இதுவரை வனத்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடும் கிடைக்கவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, காட்டு விளங்குகளால் சேதம் அடைந்துள்ள விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க வேண்டும் எனவும் விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.