பொங்கி ஓடும் வைகையின் ரம்மியமான கழுகுப்பார்வைக் காட்சிகள்!
Published : Nov 26, 2023, 2:13 PM IST
மதுரை:வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் வருசநாடு, சதுரகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் வருசநாடு, சதுரகிரி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து, மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
கடந்த நவ.10ஆம் தேதி நீர்மட்டம் 71 அடியை நெருங்கியதை அடுத்து திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பாசனத்திற்காக அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. மதுரை வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால், கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்றுப்பாலம் வழியாக கடக்கவோ வேண்டாம் என மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வைகை ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.