"எங்க ஏரியா உள்ள வராத" - கோவை நவமலை சாலையை மறித்து உலா வந்த யானைகள்.. சுற்றுலா பயணிகள் உஷார்!
கோயம்புத்தூர்:ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட பகுதியில் கோடைக்காலம் என்பாதல் வறட்சி நிலவி வந்தது. அதனால் உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தில் உள்ள விலங்குகள் பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருவது சதாரணமாகிவிட்டது.
இந்த நிலையில், நவமலை செல்லும் பாதையில் காட்டு யானைகள் தனது குட்டி யானைகளுடன் கூட்டம் கூட்டமாக உலா வருகிறது. இதனை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை அடுத்து வனத்துறையினர் யானையின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
பெரும்பாலும் மாலை நேரங்களில் மட்டுமே தண்ணீர் உள்ள இடங்களில் சுற்றி வந்த யானை கூட்டம், தற்போது அனைத்து வேளைகளிலும் சாலைகளில் உலா வருகிறது. இதனால் சுற்றுலா வரும் பயணிகள் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாதவாறும், எந்த விதத்திலும் துண்புறுத்தாதவாறும் கடந்து செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது நவமலை சாலையில் செல்லும் யானைகளை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.