சாலையில் சோலோவாக உலா வரும் சிறுத்தை - அச்சத்தில் மக்கள்! - வனத்துறை
Published : Sep 15, 2023, 6:31 PM IST
நீலகிரி:உதகை இந்திரா நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். தற்போது சிறுத்தை ஒன்று சாலையை கடக்கும் வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 60 விழுக்காட்டிற்கு மேல் வனப்பகுதியால் ஆன மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட அனைத்து விதமான வனவிலங்குகளும் வசித்து வருகின்றன.
இந்நிலையில் அண்மை காலமாகவே உதகை நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக அதிகளவில் தகவல் வெளியாகி வருகிறது. மேலும், குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் சிறுத்தை ஒன்று கேசுவலாக சாலையைக் கடந்து செல்லும் காட்சியை வாகன ஓட்டுநர்கள் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறையினர் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து, அடர் வனப்பகுதிக்குள் கொண்டு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் குன்னூர் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.