Viral:“நீ எல்லாம் ஒரு போலீசா?”... போலீஸுடன் மல்லுக்கட்டிய மது பிரியர்! - liquor
கடலூர்: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடைபெற்ற விஷ சாராய உயிரிழப்பு சம்பவங்களைத் தொடர்ந்து கடலூரில் சாராய விற்பனையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் சோதனைகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, புதுவையில் இருந்து கடலூர் மாவட்டத்தை இணைக்கும் எட்டு சாலைகளில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைத்து இரவு பகலாக போலீசார் புதுவையில் இருந்து கடலூருக்கு மதுபானங்கள் கொண்டு வருவதைத் தடுத்து வருகின்றனர்.
அவர்கள் கொண்டுவரும் சாராய பாக்கெட்டுகளைக் கைப்பற்றும் போலீசார் அங்கேயே பறிமுதல் செய்து அழிப்பதால், தினமும் மது குடித்துவிட்டு வருபவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை புதுச்சேரி மாநிலம், சோரியாங்குப்பம் பகுதியில் குடித்துவிட்டு சாராயப் பாக்கெட்டுகளை வாங்கி, இலவச ஆட்டோவில் வந்து கொண்டிருந்த நபரை போலீசார் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த சாராய பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் “இந்த சாராய பாக்கெட்டை நான் கொண்டு வரவே இல்லை, உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது. நீ எல்லாம் ஒரு போலீசா?. நான் சாராய பாக்கெட் கொண்டு வரவே இல்லை; நுங்கு மட்டும்தான் வாங்கி வந்தேன்” என கையில் வைத்திருந்த நுங்கினை காட்டி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அதன்பிறகு அவரை சமாதானப்படுத்திய போலீசார் அவரது பெயர் மற்றும் விலாசத்தை குறித்துக் கொண்டு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.