வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!
வேலூர்: வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
மாதந்தோறும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் 4-ஆம் நாள் சங்கடஹர சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், விநாயகரை போற்றி துதித்தால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
நேற்று (ஆகஸ்ட் 4ஆம் தேதி) சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகபெருமானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அருகம்புல் மாலை மற்றும் மலர் மாலைகள் அணிவித்தும் வெள்ளிக்கவசத்துடன் சிறப்பு ஆராதனை அலங்காரங்களை செய்து, மகா தீபாராதனைகளும் காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதே போன்று கோயிலில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு ரோஜா சாமந்தி, மல்லிகை, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு மலர்களை கொண்டு புஷ்ப பாவாடை அலங்காரம் செய்து மகா தீபாராதனைகள் நடைபெற்றது.